சித்திரமே 13

Loading

அல்லிக்கொடி, மனதில் இருந்ததை எல்லாம் மொத்தமாக கொட்டி விட்டு அமைதியானார். பழையதை எல்லாம் நினைத்த போது மனம் கனத்தது. தனக்கு இவ்வீட்டில் நியாயம் நடக்கவில்லை என்று தெரியும். ஆனால் அவருக்கு ஒரு நல்வாழ்வை கொடுத்தனர். என்ன தான் ஈஸ்வரி சாதாரண மாமியாராக நடந்து கொண்டாலும், அல்லியை கொடுமை படுத்தியே தீருவேன் என்று எதையுமே செய்தது இல்லை.

விதவிதமான ஆடை அணிகலன்கள். பிடித்த உணவை சமைத்தோ அல்லது சமையல் செய்பவரிடம் செய்யச்சொல்லியோ சாப்பிட அவருக்கு அனுமதி இருந்தது. சில நாட்களில் குடும்ப நிர்வாகம் கூட கற்றுக் கொண்டார்.

ஈஸ்வரிக்கு பின்னால் நின்றாலும், அந்த வீட்டின் நிர்வாகம் அல்லியுடையது என்று தெளிவாக காட்டியிருந்தார். பின்னாளில் மகனையும் பேரக்குழந்தைகளையும் அவர் தானே கவனிக்கவேண்டும்.

“உங்களுக்கு நடந்தது அநியாயம் தான். பிள்ளை பெக்க கூடாதுனு சொல்லி… ப்ச்ச்… சரி விடுங்க. அட்லீஸ்ட் வேதா பிள்ளைய தூக்க வேணாம்னு சொன்னப்போ உண்மைய சொன்னீங்களா?”

அல்லி மறுப்பாக தலையசைத்தார்.

“சொன்னா மட்டும்? முதல்ல அவ நம்ப மாட்டா. நம்பலனா கூட பரவாயில்ல. உன் தப்ப மறைக்க என் பாட்டி மேல பழி போடுறியானு சண்டை போடுவா. அதான் எதையும் யாரு கிட்டயும் சொல்லல”

“அவ செய்வா. அது வாயா? தேள் கொடுக்கு. எப்பவும் கொட்டிக்கிட்டே இருக்கும். விசஜந்து” என்று சித்தாராவும் திட்டி வைத்தாள்.

“ஆமா.. அவ புள்ளைங்க எங்க? அவ இங்க இருக்கா. புள்ளைங்க அவ மாமியார் கிட்ட இருக்குங்களா?”

“இல்ல ஹாஸ்டல்ல இருக்குங்க. எல்லாரும் பார்த்து உனக்கு இவ்வளவு பெரிய புள்ளைங்களானு கேட்டா வயசான மாதிரி இருக்காம். அதான் ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டா”

“தூ… பெத்த புள்ளைய வளர்க்குறத விட வயசு பெருசா இருக்கா இவளுக்கு? இருக்கு ஒரு நாள் அவளுக்கு”

“அவள விடுமா. பிள்ளை பெக்க முடியாதது கஷ்டமா இருந்தாலும் இந்த வீட்டுல வேற எதுக்கும் எனக்கு குறை வந்தது இல்ல” என்று ஆழ மூச்செடுத்து நிதானத்துக்கு வந்தவர், “ரொம்ப நேரமா மடியிலயே தூங்குறான் விது. ரூம்ல போய் படுக்க வைக்கலாம்” என்றதும் மகனை தூக்கிக் கொண்டு அல்லியின் அறைக்குச் சென்று படுக்க வைத்து விட்டு, அருகில் அமர்ந்தாள் சித்தாரா.

அவரும் விதுவை பார்த்து விட்டு அருகே அமர, அவரிடம் மேலும் பேசினாள். பேசிய விசயங்களில் பல அதிர்ச்சிகள் வேறு காத்திருந்தது. மாலை விதார்த் எழுந்த நேரம், விக்ரமும் வந்து சேர்ந்தான்.

“சாப்பிங் போகலாம்னு சொன்னேன்ல? கெட் ரெடி” என்று சித்தாராவிடம் சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவனை பார்க்க விசித்திரமாக இருந்தது. குழப்பத்துடனே தயாராகி மகனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

அல்லியை பார்த்து, “நைட் சாப்பிட்டு வருவோம் ஆண்ட்டி எங்களுக்கு எதுவும் சொய்யாதீங்க” என்றதோடு காரில் ஏறி அமர்ந்தாள்.

விக்ரம் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவன் முகம் வழக்கத்துக்கு மாறாக இறுகிப்போய் இருந்தது.

‘என்னடா இது நம்ம ஆன்டி ஹீரோ கோபமா இருக்கான்’ என்று வித்தியாசமாக பார்த்தாலும், அதைப்பற்றிக் கேட்காமல், “எனக்கு தனி கார் வேணும் விக்ரம்” என்றாள்.

அவளைத்திரும்பி பார்த்தவன், “எந்த மாடல்னு யோசிச்சு வை. நெக்ஸ்ட் வீக் வாங்கிடலாம்” என்றான்.

“அண்ட் சொத்த எழுதி வச்சா போதாது. செலவு சொத்துலயா பண்ணுறது? சோ அக்கவுன்ட்ல தினமும் பணம் போடு.”

“தினமும்? மாசம் மாசம் போட்டா?”

“மாசம் மாசம் போட நீ எனக்கு சம்பளமா தர்ர?” என்று சித்தாரா நக்கலாக கேட்க, “சரி தான்” என்று முடித்து விட்டான்.

அங்கிருந்த மாலுக்குள் நுழையும் போதே, “எதாவது ஸ்னாக்ஸ் வாங்கிட்டுப்போகலாம்” என்று அவளை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றான்.

ஒரு ஐஸ்க்ரீமை வாங்கி, “விதுவுக்கு சேருமா?” என்று அக்கறையாக கேட்டான்.

“வாங்கிட்டு கேட்குறத பாரு? சேரும். கொடு” என்று விட, மகன் சந்தோசமாக வாங்கிக் கொண்டான்.

“உனக்கு?”

“வேணாம். காபி சாப்பிட்டா நல்லா இருக்கும்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, “விக்ரம்” என்று ஒரு ஆச்சரியமான குரல் கேட்டது.

அதை எதிர்பார்த்தவன் போல் விக்ரமின் முகம் இறுகி, பிறகு போலியான புன்னகையில் முகம் மலர திரும்பினான்.

“ஹாய் டீனா” என்று அவன் ஆர்பாட்டமாக ஆரம்பிக்க, அப்பட்டமான நடிப்பு என்று சித்தாராவுக்கு புரிந்தது. அந்த டீனாவுக்கு அது புரியவில்லை. முகமலர்ச்சியோடு விக்ரமை அணைக்க வந்தவள், அவன் வேகமாக பிள்ளையை தோளில் தூக்கிக் கொள்ளவும் புருவம் சுருக்கினாள்.

“இது.. உன் அக்கா பையனா? மூணாவது பிள்ளை பிறந்துச்சா? சொல்லவே இல்ல” என்று கேட்டு வழுக்கட்டாயமாக ஆச்சரியப்பட்டாள் டீனா.

“நோ இவன் எங்க பையன்” என்று சித்தாரா அருகே வந்து நிற்க, விக்ரமின் முகத்தில் வெற்றிப்பெருமிதம் அவனையும் மீறி வந்தது.

டீனாவின் முகம் போன போக்கில், விக்ரமுக்கு நிம்மதியாக இருந்தது.

“என்ன சொல்லுற? சித்தாரா தான உன் பேர்? உன் பையனா?” என்று டீனா முயன்று சமாளித்தாள்.

“ஆமா. எனக்கும் விக்ரமசேனாவுக்கும் பிறந்த விதார்த் விக்ரமசேனா இவன். ஏன் கண்ணுல பார்த்தாலே தெரியலயா? இவங்க அப்பா புள்ளனு?”

“அது.. அ..” என்று வார்த்தை தெரியாமல் திணற, நல்லகாலமாக அவளுடைய தோழர் கூட்டம் அவளை அழைத்தது.

அந்த பக்கம் திரும்பி பார்த்து விட்டு, “நான்.. போறேன்” என்றதோடு விறுவிறுவென நடந்து விட்டாள்.

அவளை விக்ரம் வெறுப்போடு பார்க்க, சித்தாரா அவனை விசித்திரமாக பார்த்து வைத்தாள்.

“என்ன?” என்று விக்ரம் புருவம் உயர்த்த, “காபிய குடிச்சுட்டு சாப்பிங் போகலாமா? இல்ல இங்கயே நிக்கலாமா?” என்று கேட்டு அவனை ஆச்சரியப்படுத்தினாள்.

டீனா யாரென்று விசாரிப்பாள் என்று பார்ததால்? சம்பந்தமே இல்லாதது போல் சாப்பிங் பற்றி பேசுகிறாள்.

“ஓஓ போகலாமே” என்று திரும்ப, சித்தாராவும் நடந்தாள்.

முதலில் விதுவிற்காக உடைகள் விளையாட்டு பொருட்கள் என்று அவனுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி குவித்தனர்.

பிறகு சித்தாராவிற்கு வாங்கச்செல்ல, “நான் தனியா வந்து வாங்கிக்கிறேன். இப்போ ஒரு ஸ்விம் சூட் வேணும்” என்று அதை பார்க்க ஆரம்பித்தாள்.

விக்ரம் மனதில் ஜெர்க்கானான்.

“ஸ்விம் சூட்?” என்று கேட்டவனின் குரல் ஏகப்பட்ட அதிர்ச்சி.

“ஆமா ஏன் சாக் ஆகுற?”

“நீ போடுவியா?”

“ப்ச்ச்.. என்ன மேன் நீ? காலையில இருந்து என் டிரஸ்ஸ பத்தி கேள்வி கேட்டுட்டே இருக்க? எனக்கு பிடிச்சத போடுறேன். உனக்கு என்ன?”

“பட் எனக்கு நீ சேரில இருந்தா தான் பிடிக்கும். அதான் சொன்னேன்”

“உனக்கு பிடிச்ச மாதிரி வேணும்னா நீ ஒரு பொம்மை செஞ்சு வச்சுக்க. நான் எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருப்பேன்” என்று எரிச்சலாக சொன்னவள், மனதில் வெண்பனியை தான் திட்டினாள்.

‘ஊர் மேயுற ஆன்டி ஹீரோவுக்கு குடும்ப குத்து விளக்க கட்டி வைக்கிற கதைங்கள எழுதி என்ன தான் சாதிக்கிறாங்களோ? ஊர் மேய மார்டன் கேர்ள் வேணுமாம். பொண்டாட்டி மட்டும் புடவை கட்டி இருக்கனுமாம். ஹீரோயினுக்கு புடவை காஸ்டியூம் ரொம்ப ஓவர்டா. இவனுக்கு பிடிச்சத கட்டவெல்லாம் என்னால முடியாது. ச்சை.’ என்று மனதில் தாளித்துக் கொண்டே, அழகான ஸ்விம் சூட்டை எடுத்துக் கொண்டு சென்று பில் போட்டு முடித்தாள்.

இதற்கே நேரம் பறந்து இருக்க, அங்கே இருந்த ரெஸ்ட்டாரண்ட்டில் உணவை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

அல்லி அவர்களுக்காக காத்திருக்க, “தூங்கல?” என்று கேட்டபடி உள்ளே வந்தாள் சித்தாரா.

“இல்லமா. இப்ப தான் வேதாவோட வீட்டுக்காரு வந்தாரு. அதான் உட்கார்ந்து இருக்கேன்” என்று கூறியவர் அவள் கையில் தூங்கிக் கொண்டிருந்த விதுவை பார்த்தார்.

“தூங்குறானா? பால் வாங்கி காய்ச்சி வச்சேன். குடிக்க கொடுக்கலாமா?”

“ம்ம். நான் ஃப்ரஸ்ஸாகிட்டு கீழ வந்தே வாங்கிக்கிறேன்.”

“விதுவ என் ரூம்ல தூங்க வைக்கலாம்ல?”

“உங்க ஆசை புரியுது ஆண்ட்டி. ஆனா நடுராத்திரி நான் இல்லனா அழ ஆரம்பிச்சுடுவான். மார்னிங் முழுசும் உங்க கூட இருக்கட்டுமே” என்று கூற, பின்னால் பைகளை அள்ளிக் கொண்டு வந்த விக்ரம், அவர்களை கடந்து லிஃப்ட் நோக்கி நடந்தான்.

பட்டனை அழுத்தி விட்டு சித்தாராவை பார்க்க, அவள் உள்ளே நுழைந்து கொண்டாள்.

கதவு பூட்டவும், பாலை சூடு படுத்த சென்றார் அல்லி.

மேலே சென்றதும், “இதெல்லாம் என் ரூம்ல இருக்கட்டும். இது உன்னோடது” என்று பையை நீட்ட, வாங்கிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.

தூங்கிக் கொண்டிருந்த மகனுக்கு உடை மாற்றி விட்டு, தானும் உடை மாற்றிக் கொண்டு கீழே வந்தாள்.

இப்போது இலகுவான இரவு உடையில் வந்தவள், அல்லி கொடுத்த பாலை வாங்கிக் கொண்டாள்.

“நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்க, அவரது மனதில் என்னவோ மலர்ந்தது.

“சாப்பிட்டேன்மா.” என்றவர் முகத்தில் மறைக்க முடியாத சந்தோசம் மிளிர்ந்தது.

இதுவரை யாருமே அவரை சாப்பிட்டாயா? என்று கேட்டதில்லை. கணவன் உட்பட.

“சரி தூங்குங்க. குட் நைட்” என்றதோடு சித்தாரா திரும்பிச் சென்றாள்.

தூங்கி வழிந்த மகனை தூக்கி வைத்து பாலை குடிக்க வைத்தாள். அந்த தூக்கத்திலும் பசியில் மறுக்காமல் குடித்து விட்டு படுத்து விட்டான்.

விளக்குகளை அணைத்து விட்டு, படிப்பதற்கு ஏதுவாக விளக்கை போட்டு விட்டு புத்தகத்தை கையில் எடுத்தாள்.

ஆன்டி ஹீரோ கதை அது. எடுத்த எடுப்பில் காதலை நிராகரித்த நாயகியை அந்த ஆன்டி ஹீரோ கற்பழித்து இருந்தான்.

“தூ..” என்று தன்னை மீறி துப்பியவள், “அடியே வெண்பனி.. இது மாதிரி தான் நீயும் கதை எழுதுறியா?” என்று கொந்தளித்து விட்டாள்.

பாவம், இதைக்கேட்டு வெண்பனி வாய்விட்டு சிரித்து விட்டதை அவள் அறியவில்லை.

“முதல் மூணு பார்ட்டே இவ்வளவு கண்ட்ராவியா இருக்கு.. எவன்டா அவன் எழுதுனவன்?” என்று எரிச்சலாக பெயரை படித்தவள், “பேர பாரு வெளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் மாதிரி பேரு மட்டும் ஸ்டைலா வச்சுட்டு, உள்ள கழிசடையா எழுதி வச்சுருக்கு” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

மேலே படிக்கவே பிடிக்கவில்லை. ஆனாலும் படிக்கத்தோன்றியது. அவள் இருப்பதும் ஒரு ஆன்டிஹீரோ கதை அல்லவா? தெரிந்து கொண்டாக வேண்டுமே என்று படித்தாள்.

கற்பழித்த நாயகன், திருமணமும் செய்து கொள்ள, அதன் பிறகு தினமும் அவனிடம் வதை படுகிறாள். இடையில் பிள்ளை வேறு உண்டாகிறது.

“இங்க ஒரு அம்மா பிள்ளை பெத்துக்க முடியலனு துடிக்கிறாங்க. அங்க ஒரு ரேப்பிஸ்ட்டுக்கு பிள்ளை பிறக்குது. இதெல்லாம் கதைனு எழுதி ஏன்டா கதை உலகத்த அசிங்க படுத்துறீங்க?” என்று பொறிந்து தள்ளினாள்.

அவளால் அதை எல்லாம் ஜீரணிக்க முடியவில்லை. என்னதான் வில்லியாக இருந்தாலும், தன்மானம் உள்ளவள். திமிர் பிடித்தவள். தன்னை அனுமதி இல்லாமல் தீண்டினால், தலையை வெட்டி விடும் தைரியம் அவளுக்கு இருந்தது. அவளைப்போன்ற ஒரு கதையின் கதாபாத்திரத்தை கற்பழிக்க வைத்திருந்த எழுத்தாளரை வசைமாரி பொழியாமல் எப்படி இருப்பாள்?

“இந்த பொண்ணுக்கு அறிவு இருக்கா? நைட் உட்கார்ந்து அழுறதுக்கு ஒரு பெரிய கல்லா தூக்கிப்போட்டு அவன கொன்னுருக்கலாம். உட்கார்ந்து அழுதுட்டே இருக்கா பைத்தியம்” என்று நாயகியையும் விடாமல் கரித்துக் கொட்டி விட்டு படித்தாள்.

கடைசியில், ஹீரோ கற்பழித்தது ஒரு பொருட்டே இல்லை என்பது போல் கதை மாறியது. அவனுக்கு வேண்டியது எல்லாம் அவளுடைய காதல் மட்டுமே என்று இருந்தது. நாயகி பிரிந்ததும் அவனது துடிப்பு மட்டுமே எழுதப்பட்டிருக்க, சித்தாராவிற்கு தலை வலியே வந்து விட்டது.

“அவ பிரிஞ்சதுல இவனுக்கு உயிர் போகுதாமா? அவள ரேப் பண்ணப்போ அவ உயிர் போனதெல்லாம் பெருசு இல்லையா?” என்று கேட்டவளுக்கு, அந்த புத்தகத்தை கிழித்துப் போடும் வெறி வந்திருந்தது.

கடைசி பாகத்தை படித்தவளுக்கு சிரிப்பு வந்தது.

“டேய்.. நீங்க லூசா? இல்ல இதெல்லாம் படிக்கிறவங்க லூசாடா?” என்று கேட்டவள், தூக்கி எறிந்திருந்தாள் அதை.

அப்போதும் கோபம் அடங்கவில்லை. அருகே இருந்த ஜக்கை தூக்கி வந்து, மொத்த தண்ணீரையும் அந்த புத்தகத்தில் ஊற்றி விட்டாள்.

“இதெல்லாம் புத்தகமா போட்டு புத்தகத்துக்கு இருக்க மதிப்ப குறைச்சுட்டீங்களேடா” என்றவளுக்கு அதை மிதிக்கும் எண்ணம் வந்தது. ஆனால் வெறுப்போடு பார்த்து விட்டு, “ச்சை” என்று நகர்ந்தாள்.

மகனருகே படுத்தவளுக்கு, அந்தக்கதை இன்னும் கோபமூட்டிக் கொண்டிருந்தது. கடைசியாக அந்த நாயகனை பெரிய தியாகியாக காட்டி, அந்த நாயகியும் அவனை ஏற்றுக் கொண்டு, எல்லாவற்றையும் மறந்து வாழ்வது போல் இருந்த காட்சிகள் இரத்த அழுத்தத்தை அதிகரித்தது.

“இந்த மாதிரி புக் எல்லாம் என் கண்ணுல பட வைக்காத வெண்பனி” என்று எரிச்சலாக கூறி விட்டு, மகன் பக்கம் திரும்பி அவனை அணைத்துக் கொண்டு படுத்தாள். அப்போது தான் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது கொந்தளிப்பு. அதன் பின்பு தூங்கியும் போனாள்.

தொடரும்.

Leave a Reply